செய்திகள்

ஆட்கடத்தல் வழக்கில் பஞ்சாபி பாடகர் மெஹந்திக்கு 2 ஆண்டுகள் சிறை

ஆட்கடத்தல் வழக்கில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் தலர் மெஹந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பாட்டியாலா:

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பஞ்சாபி பாப் பாடகரான தலர் மெஹந்தி, தனது இசைக்குழுவின் பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துவதாகவும், பலரிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு ஆட்களை கடத்தி அங்கேயே பணத்துக்காக சட்டவிரோதமாக விட்டுவிட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீதும் அவரது சகோதரர் சாம்ஷர் சிங் மீதும் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் 2003-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில், சாம்ஷர் சிங் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். #Tamilnews