செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே அரசு பஸ் மோதி செங்கல் சூளை தொழிலாளி பலி

சிங்காரப்பேட்டை அருகே அரசு பஸ் மோதி செங்கல் சூளை தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 35). இவர் வெள்ளக் குட்டை கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவரும், இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த வேலு(34) என்பவரும் வெள்ளக்குட்டையில் இருந்து திருப்பத்தூரை நோக்கி ஓரே மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை- திருப்பத்தூர் மெயின் ரோடு நார்த்தாம்பட்டி பகுதியில் போகும்போது, திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூரை நோக்கி அரசு பஸ் ஒன்று அவ்வழியாக சென்றது. அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி அந்த பஸ்சின் பின் பகுதியில் வேகமாக மோதியதாக தெரிகிறது. இதில் பழனி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

பொதுமக்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

பலியான பழனிக்கு கிருஷ்ணவேனி (30) என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.