புதுடெல்லி:
இந்தியாவின் தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் பறந்து சென்றது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு துறை மந்திரி எங் ஹென் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்து வருபவர் எங் ஹென். இந்தியா சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தம் நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்தியா வந்த எங் ஹென் மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு இன்று வருகை தந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகொண்டா விமானப்படை தளத்துக்கு சென்ற எங் ஹென், இந்தியாவின் சொந்த தயாரிப்பில் உருவான தேஜாஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார். சிறிது நேரத்துக்கு பிறகு, தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறக்க விரும்பினார்.
இதையடுத்து, அந்த விமான தளத்தில் இருந்து பைலட்கள் உள்பட சிங்கப்பூர் பாதுகாப்பு துறை மந்திரி தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி உட்கார்ந்தார். சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானத்தில் பறந்தார். அதன்பின் அவர் கீழே இறங்கினார்.
இதுதொடர்பாக எங் ஹென் கூறுகையில், இந்தியாவின் தயாரிப்பில் உருவான தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செய்தது காரில் பயணித்தது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது. போர் விமானத்தில் என்னை பயணம் செய்ய அனுமதித்த விமான படையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.