சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த 1-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சீரடி சாய்பாபா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம், செயின், மோதிரம், வளையல் உள்பட 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.