செய்திகள்

பாராளுமன்றம் - சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்: தம்பிதுரை

பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி வரவில்லை. ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய  இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது.

செலவு குறையும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம். ஒரே இந்தியா என்ற கருத்தியலை அ.தி.மு.க. எதிர்க்கிறது. தமிழகத்தில்  ஆட்சியையும்  அ.தி.மு.க.வையும் காப்பாற்றுவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களைத் தான் காலம் கடந்து மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews