பீஜிங்:
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு திரும்ப அழைக்க வேண்டும் என கூறிவிட்டது. சீனா மிரட்டும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கையை வெளியிடும் நிலையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ரென் குவோகியாங், ‘சிக்கிம் விவகாரம் தொடர்பான பிரச்சனை ஆரம்பித்த நாளில் இருந்தே நல்லெண்ணத்தின் அடிப்படையில் ராஜதந்திர ரீதியாக அதிகாரிகள் மூலமாக இந்தியாவுடன் பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று நாங்கள் இருந்து வருகிறோம்.
இருநாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் பரஸ்பர உறவு மற்றும் பிராந்தியத்தின் அமைதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு எங்கள் நாட்டு ராணுவமும் மிகவும் பொறுமையை கடைபிடித்து இவ்விவகாரத்தை அணுகி வருகிறது. எனினும், நல்லெண்ணத்துக்கு என்று சில அடிப்படை சித்தாந்தங்கள் உள்ளன. அதேபோல், பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.
தாமதப்படுத்துவதன் மூலம் இவ்விவகாரத்தை நீர்த்துப்போக வைக்கும் மாய தந்திரத்தை இந்தியா கைவிட வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக எங்கள் நாட்டுப் படைகள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை வேறெந்த நாடும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
நாட்டின் எல்லைப்பகுதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை எங்கள் ராணுவம் தீர்மானமாக உறுதிப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.