கோவை:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கோவையில் கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேற்கு மண்டல செயலாளர் சுசி கலையரசன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் தரையில் அமர்ந்து அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். 2 பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை தேசிய பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் அம்பேத்கர் வெண்கல சிலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திராவிடர் தமிழர் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் வெண்மணி தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20 பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் கூட்டு குழு சார்பில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அம்பேத்கர் சிலை உடைத்தவர்கள் யார்? என்பதை கண்டறிய தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட உடனே மாற்று சிலையை அமைத்து தாழ்த்தப்பட்ட மக்களிடையே எந்தவிதமான பதட்டமும் உருவாகாமல் தடுத்து உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் துரை இளங்கோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகள் அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றனர். இதில் வக்கீல்கள் முருகேசன், கார்கி, சிவசாமி தமிழன், நிக்கோலஸ், ஷாஜித், பிரகாஷ், ஜோதி உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.