பெங்களூர்:
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடந்துள்ளது. கடந்த தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.
எனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் பான்மையுடன் வெல்லும் தேர்தலுக்கு பிறகு மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் இணைந்தோ அல்லது பிற கட்சிகளின் ஆதரவுடனோ ஆட்சி அமைக்கும் அவசியம் ஏற்படாது. காங்கிரஸ் ஆட்சி அமையப்போவதால் தொங்கு சட்டசபை என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை வைத்தே பிரதமர் மோடி மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடாவை புகழ்ந்துள்ளார். தேர்தலையொட்டி அரங்கேறும் இந்த நாடகத்தை கர்நாடக மக்கள் நம்பமாட்டார்கள். மோடியின் புகழ்ச்சியால் எந்த பலனும் கிடைக்காது. என்னைஇரு தொகுதியிலும் தோற்கடிக்க ரகசிய கூட்டணி அமைந்துள்ளன. அதையெல்லாம் மீறி நான் இரு தொகுதிகளிலும் வெல்வேன்.
மோடி கர்நாடகாவுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த இரு வறட்சி காலகட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டேன். ஆனால் மோடி கூடுதல் நிதி ஒதுக்க வில்லை. அவரை சந்திக்க நேரம் கேட்ட போது என்னை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. அனைத்து கட்சி தலைவர்களுடன் சந்தித்து முறையிட்ட போது கூட மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார். #Karnatakaassemblyelection #Siddaramaiah #BJP