சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு பற்றி வெளியிடும் பத்திரிகைகளுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருப்பதால் தமிழர் தந்தையின் புகழுக்கு மேலும் புகழ் சேரும்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தனது பத்திரிகையின் மூலம் மக்களிடம் சுதந்திர உணர்வை, தியாக மனப் பான்மையை ஏற்படுத்தியவர். குறிப்பாக தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டு நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை தமது வாழ்நாளில் கடை பிடித்த பண்பாளர்.
அது மட்டுமல்ல எளிய நடையில் பாமரரும் படித்து புரிந்துகொள்ள ஏதுவாக பிற மொழி கலப்பின்றி பத்திரிகை நடத்தியவர். அதன் அடிப்படையில் தான் பத்திரிகை மிக முக்கியமான ஊடகமாக தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாகத் தான் இன்றைக்கு தினத்தந்தியும், மாலை பத்திரிகையும், வார இதழும், மாத இதழும் மற்றும் தொலைக்காட்சியும் பிரபலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறது.
தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ்ந்து காட்டிய தமிழர் தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது போற்றுதலுக்குரியது.
மேலும் பத்திரிகை துறையில் மட்டுமல்லாமல் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கும், தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாட்டின் மேம்பாட்டிற்கும் பல்வேறு நல்ல பணிகளும், உதவிகளும் செய்த பெருமைக்குரியவர். இப்படி தமிழ் மொழி, தமிழ் இனம், நாகரிகம், பண்பாடு போன்றவற்றிற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்ந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு பற்றி வெளியிடும் பத்திரிகைகளுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
அதே போல தமிழக அரசு பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம், ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம், இசை மேதை நல்லப்ப சுவாமிக்கு நினைவுத் தூண் மற்றும் பாரத மாதாவுக்கு நினைவாலயம் அமைப்பதற்காக நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, அவற்றை திறந்து வைத்து அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.