செய்திகள்

ஆரோக்கியமான குழந்தை பெற டீ, காபி குடிக்க கூடாது: கர்ப்பிணிகளுக்கு மத்திய ஆயுர்வேத துறை அறிவுரை

ஆரோக்கியமான குழந்தை பெற கர்ப்பிணிகள் டீ, காபி குடிக்க கூடாது என மத்திய ஆயுர்வேத துறை அறிவுரை வழங்கியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கர்ப்பிணிகள் அனைவரும் ஆவல் கொள்கின்றனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தக தொகுப்பை ஆயுர்வேதா, யோகா மற்றும் சித்தா, யுனானி (ஆயுஷ்) துறை வெளியிட்டுள்ளது.

அதில் தாய் மற்றும் குழந்தை நலன் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆரோக்கியமான குழந்தைகள் பெற கர்ப்பிணிகள் தங்கள் விருப்பங்களை விலக்கி கொள்ள வேண்டும். கோபம், பகைமை மற்றும் காமத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள், கரம் மசாலா, வறுவல் மற்றும் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது.

முட்டை மற்றும் அசைவ உணவு பொருட்களையும் கைவிட வேண்டும். பக்தி மார்க்க சிந்தனைகளை மனதில் ஏற்ற வேண்டும். சிறந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கை அறை சுவர்களில் நல்ல அழகான படங்களை மாட்டி வைக்க வேண்டும். அதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு நல்ல சிந்தனை உருவாகும். கர்ப்பிணிகள் யோகாசன பயிற்சி செய்வது நல்லது. மேற்கண்ட தகவல்கள் புத்தக தொகுப்பில் இருப்பதாக ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்.

கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகள் அடங்கிய புத்தகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. சமீபத்தில் நடந்த விழாவில் இது வினியோகிக்கப்பட்டது.