நித்திரவிளையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி. 
செய்திகள்

மாயமான மீனவர்களை மீட்க கோரி நித்திரவிளையில் இன்று கடை அடைப்பு

மாயமான மீனவர்களை மீட்க கோரி நித்திரவிளையில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

களியக்காவிளை:

ஒக்கி புயல் தாக்கியபோது கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவடட மீனவர்கள் மாயமானார்கள். வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய அவர்களில் பலர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இன்னும் 433 மீனவர்கள் பற்றி இதுவரை எந்தவொரு தகவலும் தெரியவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 7-ந் தேதி குழித்துறையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் திரண்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போராட்டம் பரவியது. சின்னத்துறை, கன்னியாகுமரி, முட்டம், குளச்சல், மணவாளக்குறிச்சி என பல இடங்களில் கடலில் இறங்கி போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா என மாவட்டம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டம் துறை கிராமங்களில் மீனவர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்று தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

இன்று 6-வது நாளாக சின்னத்துறையில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். மீனவர்களுக்கு ஆதரவாக இன்று நித்திரவிளையில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப் போவதாக வியாபாரிகள் அறிவித்தனர். அதன்படி இன்று அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.