செய்திகள்

போராட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயி குடும்பத்தாருடன் ம.பி. முதல்வர் சந்திப்பு

மத்தியப்பிரதேசத்தில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய நடந்த போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில் பலியான விவசாயி குடும்பத்தாரை இன்று சந்தித்த அம்மாநில முதல்-மந்திரி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மாலை மலர்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு அரசை வலியுறுத்தி மால்வா மாவட்டத்தில் உள்ள மன்ட்சவுர் நகரில் கடந்த ஆறாம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையின் எதிரொலியாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

இதையடுத்து, பலியானவர்களின் குடும்பத்தாரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இழப்பீட்டு தொகையை வழங்க அவர் தீர்மானித்தார். இதில் முதல்கட்டமாக மால்வா மாவட்டத்தில் உள்ள பட்வான் மாவட்டத்துக்கு இன்று காலை வந்த சிவராஜ் சிங் சவுகான் வன்முறையில் பலியான கன்ஷியாம் தக்கட் என்பவரின் குடும்பத்தாருடன் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.

அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்திரவாதம் அளித்தார்.