புதுடெல்லி:
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும்.
அந்த வகையில் 2017-18ம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம், எஸ்.பி.ஐ. வங்கி 1771.77 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணைமந்திரி ஷிவ்பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
எஸ்.பி.ஐ. வங்கி 2016-17ம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் அபராதமே வசூலிக்காத நிலையில், 2017-18ம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் 1771.77 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. 21 வங்கிகளில் எஸ்.பி.ஐ. வசூலித்த அபராதத் தொகைதான் அதிகம். எஸ்.பி.ஐ. வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேசனல் வங்கி, 97.34 கோடி ரூபாய் அபராதம் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
#SBI #minimumbalancefine #ShivPratapShukla