செய்திகள்

சிவாஜி மணிமண்டபம் அடுத்த மாதம் திறப்பு

சென்னையில் ரூ.2½ கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று, பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலை மலர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, சென்னையில் அரசு சார்பில் அழகிய மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

அடையாறு ஜானகி- எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரி எதிரே, 24 ஆயிரம் சதுரஅடி நிலத்தில் சிவாஜி கணேசனுக்கு ரூ.2½ கோடி செலவில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. இதில் 2 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.

இது கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் சிவாஜி கணேசன் சிலையை அமைப்பதற்கான பீடம் கட்டப்பட்டு இருக்கிறது.

சென்னை கடற்கரை சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே அமைந்துள்ள சிவாஜி சிலையை கொண்டு வந்து இங்கு நிறுவுகிறார்கள். சிலையை சுற்றி வரவும், மண்டபத்தை சுற்றிப் பார்க்கவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தின் உயரம் 20 அடி. இதற்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நடைபாதையை சீரமைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.

சிவாஜி மணிமண்டபத்தை சுற்றி உள்ள பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. விரைவில் அனைத்து வேலைகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

சிலையையும் நிறுவ உள்ளனர். அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு பூங்கா, நடைபாதையுடன் சிவாஜி மணிமண்டபம் அழகிய மண்டபமாக காட்சி அளிக்கும். சிவாஜி தொடர்பான படங்களும் மணி மண்டபத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.


சிவாஜி மணிமண்டபம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று, பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும். திறப்பு விழா தேதியை அரசுதான் முடிவு செய்யும். அடுத்த மாதம் திறப்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளது.