செய்திகள்

ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சிவ கேசவன் தங்கம் வென்று சாதனை

ஜெர்மனியில் நடைபெற்ற ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் நான்காவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாலை மலர்

ஜெர்மனி நாட்டின் அல்டன்பெர்க் நகரின் ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் என்ற வீரர் தங்கம் வென்றார்.

சிவ கேசவன் 55.60 நிமிடங்களில் இலக்கை கடந்து முதலிடம் பெற்றார். ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக தொடங்கிய கேசவன் இரண்டாவது முனையில் முன்னேறி சென்றார். மிகவும் கடுமையான பாதையை கேசவன் சிறப்பாக கடந்து சென்றார்.

அவரை தொடர்ந்து தைய்வானின் லியின் டி-அன் இரண்டாவது இடத்தையும், கொரியாவின் கிம் டாங் கியூ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இது குறித்து சிவ கேசவன் பேசுகையில், 'இந்தியாவிற்கு நான்காவது முறையாக தங்கம் பெற்று தந்தது பெருமை அளிக்கிறது. உலகில் உள்ள மிகவும் கடுமையான பாதையில் பயணம் வெற்று பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன் இந்த பாதையில் மோசமான அனுபவங்கள் உள்ளது. அதனால் இது மிகவும் சவாலான போட்டியாக அமைந்தது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றி' என கூறினார்.

இதைத்தொடர்ந்து, சிவ கேசவன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். தென்கொரியாவின் பியாசங் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்தியர் சிவ கேசவன் என்பது குறிப்பிடத்தக்கது.