மும்பை:
மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசிலும் சிவசேனா இடம் பெற்றுள்ளது.
ஆனால் பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை சிவசேனா விமர்சனம் செய்து வருகிறது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோடியின் அலை மங்கி விட்டது. ராகுல் காந்தி சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார் என்றார்.
அவரது இந்த விமர்சனத்துக்கு பாரதிய ஜனதா பதிலடி கொடுத்தது. பாரதிய ஜனதா கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் சாக்ஷோ முடிவு செய்ய வேண்டும் என்று மராட்டிய முதல்- மந்திரி பட்னாவக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதாதான் எங்களுக்கு முதன்மையான எதிரி என்று சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய்ராவத் தெரிவித்துள்ளார். நாசிக்கில் இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டிய அரசு பாரதிய ஜனதாவுக்கு சொந்தமானது. நாங்கள் அரசாங்கத்தில் இடம் பெற்று இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுக்கு பதிலாக சிவசேனாவை தாக்குவதை பாரதிய ஜனதா இலக்காக கொண்டுள்ளது. இதனால் எங்களது முதன்மையான எதிரி பாரதிய ஜனதாதான்.
2019 பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி இல்லாமல் தேர்தலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம். உத்தவ் தாக்கரே அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக ராகுல்காந்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். தற்போது அவர் சொல்வதை மக்கள் ஆர்வத்துடன் கேட்கின்றனர். ராகுல் காந்தியை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
இவ்வாறு சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.