பிரதமர் மோடி 
செய்திகள்

மோடியை கிருஷ்ணரோடு ஒப்பிட்ட சிவசேனா எம்.பி.

திரவுபதிக்கு கிருஷ்ணர் எப்படி உதவினாரோ அதேபோல் முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சகோதரனாக இருந்து உதவி இருக்கிறார் என்று சிவசேனா எம்.பி. வினாயக் ராவுத் கூறினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் முத்தலாக் சட்டமசோதா தொடர்பான விவாதம் நடந்தது. அதில், பல எம்.பி.க்கள் பேசினார்கள்.

அப்போது சிவசேனாவை சேர்ந்த எம்.பி. வினாயக் ராவுத் பிரதமர் மோடியை கிருஷ்ணரோடு ஒப்பிட்டு பேசினார். அவர் கூறியதாவது:-

மகாபாரதத்தில் திரவுபதிக்கு துரியோதனன், துச்சாதனனால் ஆபத்து வந்தபோது கிருஷ்ண பகவான் திரவுபதியை காப்பாற்றினார். அவருக்கு பாதுகாவலனாக கிருஷ்ண பகவான் இருந்தார்.

அதேபோல் இப்போது முஸ்லிம் பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

இதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி காவலனாக இருக்கிறார். திரவுபதிக்கு கிருஷ்ணர் எப்படி உதவினாரோ அதேபோல் முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சகோதரனாக இருந்து உதவி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.