செய்திகள்

சீரடி சாய்பாபா கோவிலுக்குள் பூங்கொத்து, மாலைகள் எடுத்து செல்ல தடை

மராட்டிய மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்துக்குள் பூங்கொத்து, மாலைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீரடி மண்ணில் வாழ்ந்து ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திய அந்த மகானை உலகம் முழுக்க வாழும் பல கோடி பேர் “கண் கண்ட தெய்வம்” ஆக கருதி வழிபடுகிறார்கள்.

வாழ்நாளில் ஒரு தடவையாவது சீரடி சென்று வழிபடுவதை சாய்பாபா பக்தர்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். அப்படி செல்லும் பக்தர்கள், பாபாவுக்கு பூக்கள் எடுத்துச் சென்று சமர்ப்பிப்பதுண்டு.

இதையொட்டி பக்தர்களுக்கு பூ விற்பனை செய்ய நூற்றுக்கணக்கானவர்கள சீரடியில் உள்ளனர். அவர்களது முக்கியத் தொழிலே பூ விற்பதுதான்.

2 அல்லது 3 ரோஜாப் பூக்களை கட்டி வைத்து பூங்கொத்து போல தயாரித்து அதை 20 ரூபாய்க்கு அவர்கள் விற்கிறார்கள். சீரடி தலத்தின் வாசல் பகுதிக்கு வரும் பக்தர்களை மொய்த்துக் கொண்டு பூ வியாபாரிகள் போட்டி போட்டு பூக்கள் கொடுப்பதுண்டு.

பூ விற்பவர்களின் இந்த செயல் பக்தர்களுக்கு பெரும் தொல்லையாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் சீரடி ஆலயத்துக்குள் சில சமயம் பூக்கள் ஆங்காங்கே சிதறி காலில் மிதிபடும் நிலையும் உள்ளது.


இதையடுத்து சீரடி ஆலயத்துக்குள் சிறு, சிறு பூங்கொத்துகளை பக்தர்கள் எடுத்து வர தடை விதிக்கலாமா என்று நிர்வாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சீரடி கோவிலுக்குள் பூங்கொத்து எடுத்து வர தடை விதிக்கப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சீரடி சாய்பாபா தேவஸ்தானம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.