சில பெற்றோர்கள் தங்களது சின்னஞ்சிறு குழந்தைகளை மிரட்டி படிக்க வைக்கும் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். ஜாலிக்காகவோ அல்லது எங்களது குழந்தைகளை சிறுவயதில் இருந்து கண்டிப்புடன் வளர்க்கிறோம் என்பதை காண்பிப்பதற்காகவோ இப்படி செய்கிறார்கள். சிலர் இப்படி சித்தரித்தும் வெளியிடுகிறார்கள்.
ஆனால், உலகத்தைப் பற்றி ஏதும் அறியாத குழந்தைகளை இப்படி வாட்டி வதைப்பது பெரும்பாலானவர்களின் மனதை காயப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஒரு வீடியோவை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் தவான் மற்றும் உத்தப்பா ஆகியோர் மனமுடைந்துள்ளனர்.
அந்த வீடியோவில் குழந்தையை ஒன்று முதல் 10 வரை படிக்கச் சொல்லி ஒரு பெண்மணி சொல்கிறார். அந்த குழந்தை மூன்று வரை சொல்லிய பிறகு திணறுகிறது. ஆனால், பெண்மணி தொடர்ந்து வற்புறுத்துகிறார்.
இதனால் அந்த குழந்தை தனக்கு தலை வலிக்கிறது, போதும் என்று கெஞ்சுகிறது. ஆனால், அந்த பெண்மணி விட்டபாடில்லை. ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார்.
இதுகுறித்த வீடியோக்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, குழந்தைகளை பொறுமையாக கையாளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எந்த நேரமும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பொறுமையாக பழகுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது திறமைக்கு ஏற்றபடி கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளை அடிப்பதையும், அவர்களை இழிவுபடுத்துவதையும் தவிருங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.