செய்திகள்

புவனேஷ்வர்குமார், தினேஷ் கார்த்திக்குக்கு ஷிகர் தவான் புகழாரம்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த புவனேஷ்வர்குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு சக வீரர் ஷிகர் தவான் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாலை மலர்

புனேயில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை ஷிகர் தவான் (68 ரன்), தினேஷ் கார்த்திக் (64 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் இந்திய அணி 46 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடைசி ஒரு நாள் போட்டி கான்பூரில் நாளைமறுதினம் நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு அரைசதம் விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்போதெல்லாம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 230 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. எங்களது பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே கச்சிதமாக பந்து வீசினர். அதற்கு ஏற்ப பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சாளர்களே வெற்றிக்குரிய பாதி பணியை முடித்து விட்டனர். பொதுவாக 300 ரன் இலக்கை துரத்திப்பிடிப்பதுடன் (சேசிங்) ஒப்பிடுகையில், 230 ரன்களை எட்டுவதில் உள்ள நெருக்கடி குறைவு தான்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தனது பந்துவீச்சில் தற்போது மிக உயரிய நிலையில் இருப்பதாக கருதுகிறேன். அவர் சரியான அளவில் கட்டுக்கோப்புடன் பந்து வீசுவதுடன், பந்து வீச்சிலும் வித்தியாசத்தை காட்டுகிறார். அவர் யார்க்கர் வகை பந்துகளை வீசும் விதத்தை பார்க்கும் போது, அவரை உலகின் சிறந்த பந்து வீச்சாளராக பாவிக்கிறேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும், இந்திய அணியிலும் அவரது பந்துவீச்சை பார்க்கிறேன். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். அது மட்டுமின்றி அவர் தனது பந்து வீச்சு மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அதைத் தான் களத்தில் பார்க்கிறீர்கள்.

தினேஷ் கார்த்திக் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் கடினமாக உழைக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்கள் குவித்ததன் பலனாக மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். மிடில் வரிசையில் சிறந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். தனது திறமையை அவர் நிரூபித்து காட்டியிருக்கிறார். ஒன்று, இரண்டு வீதம் இடைவிடாது அவர் ரன் எடுக்கும் போது, மறுமுனையில் உள்ள பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி குறைந்து விடும். இந்த ஆட்டத்தில் என்னால் ஒன்று, இரண்டு வீதம் ரன்களை தொடர்ச்சியாக எடுக்க இயலவில்லை. ஆனால் அந்த பணியை தினேஷ் கார்த்திக் சரியாக செய்தார். அதனால் எனக்கு நெருக்கடி தணிந்தது.