விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் டெஸ்ட் போட்டி காலேயில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது.
இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா, தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி, பொறுப்புடன் விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.
சதம் அடித்த ஷிகர் தவான், தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜா அரை சதம் கடந்தார்.
அணியின் ஸ்கோர் 280 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 190 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், ஆட்டமிழந்தார். 168 பந்துகளை சந்தித்து 31 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை அவர் எட்டினார். இதனால் 10 ரன்னில் இரட்டை சதம் வாய்ப்பை தவறவிட்டார். டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.