இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பான வழக்கு லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஷாபாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை லாகூர் ஐகோர்ட் நீக்கியது. இதையடுத்து, தனது பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காகவும், மருத்துவ பரிசோதனை செய்வதற்காகவும் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி லண்டன் சென்றார்.
வழக்கு விசாரணையின்போது, அவரது வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது, ஜூன் 11ம் தேதி ஷாபாஸ் ஷெரீப் நாடு திரும்புவார் என கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஷாபாஸ் ஷெரீப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நாடு திரும்ப உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தகவலை அவரது தனிப்பட்ட உதவியாளர் ஒருவர் கூறியதாக, டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.