செய்திகள்

அத்வானி ஜனாதிபதியாக 80 சதவீத பா.ஜனதாவினர் விரும்பினர்: சத்ருகன்சின்கா

அத்வானி ஜனாதிபதியாக வேண்டும் என்று 80 சதவீத பா.ஜனதாவினர் விரும்பினர் என சத்ருகன்சின்கா கூறியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையிலான குழுவில் சத்ருகன்சின்கா இருந்தார். அந்த குழுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டு அவரது தலைமையில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அத்வானியை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என்று சத்ருகன் சின்கா சமூக வலைதளங் களில் ஆதரவு திரட்டினார். ஆனால் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக தேர்வானார்.

இந்த நிலையில் சத்ருகன்சின்கா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

அத்வானி எனது நண்பர். தத்துவஞானி, வழிகாட்டி, குரு, ஈடு இணையற்ற தலைவர். அவர் நமது நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று 80 சதவீத பா.ஜனதாவினர் விரும்பினர். ஆனால் அது நடக்கவில்லை.

பா.ஜனதாவின் எனது முதலாவது மற்றும் கடைசி அரசியல் கட்சியாகும். பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு 2 எம்.பி.க்கள் இருந்த காலத்திலேயே நான் அக்கட்சியில் சேர்ந்து விட்டேன். அப்படி இருக்கும் போது நான் ஏன் பா.ஜனதாவில் இருந்து விலக வேண்டும்.

பா.ஜனதாவில் இரு பெரும் சக்திகளாக இருப்போர்தான் என்னை நிராகரித்து வருகின்றனர். பிரதமர் மோடியை 2 வாரங்களுக்கு முன்பு நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் எனக்கு நேரம் ஒதுக்கவில்லை. இப்போது வேண்டுமானாலும் அவர் எனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு வரலாம். அப்படி வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.