பாட்னா:
பிரபல இந்தி சினிமா நடிகரான சத்ருகன் சின்ஹா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக முன்னர் பதவி வகித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள பாட்னா சாஹேப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பீகார் மாநில செல்லப்பிள்ளை என்று பரவலாக அழைக்கப்படும் இவர் தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை கொண்டு பல்வேறு நற்பணிகளை இவர் நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில், பாட்னா நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாங்கப்பட்ட இரு நடமாடும் ரத்த வங்கி ஆம்புலஸ்களை வழங்கினார்.
பாட்னா அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தையும், மறைந்த தேசிய தலைவர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் மனைவியின் பெயரால் இயங்கிவரும் ஜெய பிரபா மருத்துவமனைக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அவர் அளித்தார்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபர்களை காப்பாற்ற ரத்தம் மிக அவசிய தேவையாக உள்ளது. எனவே, இந்தமுறை எனது தொகுதி நிதியில் இருந்து ரத்த வங்கி ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க தீர்மானித்தேன் என்று சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டார்.