புதுடெல்லி:
சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சசி தரூர் எழுதிய ‘அன் எரா ஆஃப் டார்க்னெஸ்’ (இருளின் சகாப்தம்) உரைநடை நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான நந்த் கிஷோர் ஆச்சார்யாவின் ‘சில்டே ஹியு ஆப்னே கோ’ என்ற கவிதை தொகுப்பிற்கும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.