சசிதரூர் எம்.பி. 
செய்திகள்

கொரோனா தடுப்பு பணி - கேரள பெண் மந்திரியை பாராட்டிய சசிதரூர் எம்.பி.

கொரோனா தடுப்பு பணியில் கேரள பெண் மந்திரி கே.கே. ஷைலாஜாவின் முயற்சியை பாராட்டி காங். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. கேரள சுகாதார துறையினர் எடுத்த பெருமுயற்சி காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அங்கு கட்டுக்குள் வந்தது. இதற்கு கேரள சுகாதார மந்திரி கே.கே. ஷைலாஜாவின் முயற்சியும் ஒரு காரணம்.

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைபடுத்துவது, இப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், நர்சுகளுக்கு ஊக்கம் அளித்தது போன்றவை இவருக்கு பாராட்டை பெற்று தந்தன.

அதோடு, கொரோனா நோயாளிகள் பற்றிய தகவலையும், அதில் இருந்து மீண்டவர்கள் பற்றிய விபரங்களையும் தினமும் மக்களுக்கு தெரிவித்து அவர்கள் பீதியடையாமல் பார்த்து கொண்டார். நோய் தாக்கினாலும் நாம் அதில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார்.

கேரள சுகாதார துறையினரை ஒருங்கிணைத்து ஷைலஜா மேற்கொண்ட பணிகளை கட்சி சார்பற்று பலரும் பாராட்டினர்.

கேரளாவில் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரசின் திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூரும் மந்திரி ஷைலாஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் சசிதரூர் வெளியிட்டுள்ள பதிவில், கேரள சுகாதார துறை மந்திரி ஷைலஜா சர்வ வல்லமை படைத்தவர். மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் அவர் திறமையாக செயல்பட்டார். எனவே அவர் பாராட்டுக்கு தகுதியானவர்.

கொரோனாவை கட்டுப்படுத்தியதில் இன்னொரு பங்கு கேரள மக்களுக்கும் உண்டு. அவர்களும் இந்த கதையின் ஹீரோக்கள். அவர்களையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சசிதரூரின் டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் சசிதரூருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.