ஷர்ஜூல் இமாம் 
செய்திகள்

தேசத்துரோக வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு கொரோனா

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்து தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜூல் இமாமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

கவுகாத்தி:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும்

அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 

ஒருவனான ஷர்ஜீல் இமாம் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். 

ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவனான இமாம் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பேசிய சர்ச்சைக்குரிய விடீயோ வெளியானது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து ஷர்ஜூல் இமாம் மீது டெல்லி, அசாம், அருணாச்சலப்பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

குறிப்பாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பீகாரில் பதுங்கி இருந்த இமாமை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இமாம் பின்னர் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து தேசத்துரோக வழக்கில் கைதான இமாம் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிறையில் உள்ள கைதிகளும் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர்.

இந்நிலையில், கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜூல் இமாமுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளை கொண்ட கவுகாத்தி மத்திய சிறைச்சாலையில் 338 கைதிகளுக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிஏஏ போராட்டத்தின் போது வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையில் இமாம் வரும் 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவேண்டும். இதையடுத்து, கவுகாத்தி சிறையில் உள்ள இமாமை டெல்லி அழைத்து வர கடந்த 17 ஆம் தேதி டெல்லி போலீசார் அசாம் சென்றனர்.

சிறையில் இருந்து அழைத்து செல்வதற்கான நடைமுறைகளில் இமாமுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஜூலை 19 ஆம் தேதி வெளியான பரிசோதனை முடிவில் இமாமுக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து இமாம் சிறையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கவுகாத்தி சிறையில் உள்ள இமாமை டெல்லி அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.