திருவனந்தபுரம்:
ஷார்ஜா நாட்டுக்கு கடந்த ஆண்டு சென்றிருந்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசு விருந்தினராக தங்கள் மாநிலத்துக்கு வருமாறு ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி-க்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பின்பேரில் கடந்த 24-ம்கேரளாவுக்கு வந்த ஷார்ஜா மன்னரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் இதர மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஷார்ஜா மன்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவர்னர் சதாசிவத்திடம் இருந்து இந்த பட்டத்தை அவர் பெற்றுகொண்ட விழாவில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், சர்வதேச உறவுகள், கலை மற்றும் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவைக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதாக பட்டத்துடன் அளிக்கப்பட்ட பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை மந்திரி ரவீந்திரநாத், கோழிக்கோடு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பஷீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் 28-ம் தேதிவரை இங்கு தங்கியிருக்கும் ஷார்ஜா மன்னர் இன்று மாலை சுல்தானும் அவரது வரலாற்று பதிவுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அவர் வேறுசில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என தெரிகிறது.