செய்திகள்

ஊழலில் ஈடுபட்டுள்ள திரிபுரா மந்திரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: அமித்ஷா எச்சரிக்கை

திரிபுரா மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்டுள்ள மந்திரிகள் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.

மாலை மலர்

அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக முதல் மந்திரி பதவி வகித்து வருகிறார். மார்ச் மாதம் 6-ம் தேதியுடன் சட்டசபைக்கான காலம் முடிவடைவதால் விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி வருகிறார்.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற ரோஸ் வாலி சிட்பண்ட் மோசடியில் உணமை நிலவரம் அறிவதற்காக நாங்கள் சி.பி.ஐ. விசாரணையை கோரியுள்ளோம்.

திரிபுராவில் நாங்கள் அடுத்த முறை ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்துக்குள் சிட்பண்ட் மோசடியில் தொடர்பு உடையவர்களை நிச்சயம் கண்டறிந்து விடுவோம். இந்த விவகாரத்தில் பல மந்திரிகளுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

இப்போது தாமரை மலரும் நேரம். அதனால்தான் எங்கு பார்த்தாலும் தாமரை மலர்ந்துள்ளது. விரைவில் திரிபுராவிலும் தாமரை மலரும்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews