ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் ஒன்றான புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கலாம் என உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் மாவட்டம் முழுக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் சார்ந்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர், ஜம்மு காஷ்மீர் போலீசாரின் சிறப்பு திட்டக் குழுவினர் இணைந்து மலங்கபோரா, அவாந்திபோரா உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். .
பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி வாசிகள் போராட்டம் நடத்தியதோடு, பாதுகாப்பு படையினரை குறிவைத்து கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டம் காரணமாக சலசலப்பு ஏற்பட்ட போதும், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், போராட்டம் தீவிரமடையாமல் தடுக்கப்பட்டது. மேலும் தீவிரவாத அச்சுறுத்தல் சார்ந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.