ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டத்தின் ராஜபேட்டா பகுதியில் உள்ள கோழி பண்ணையில் பாலாராஜூ என்பவர் வேலைப்பார்த்து வந்தார். அவர் சித்திபேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோழி பண்ணையில் வேலைப்பார்ப்பதற்காக சமீப காலமாக தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமனார்-மாமியாருடன் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
அவர் இன்று வேலைக்கு வராததால் அவருடன் பணிபுரிபவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள அனைவரும் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடலை போலீசார் மீட்டனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மரணமடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.