செய்திகள்

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 7 பதக்கங்களை உறுதிசெய்த இந்திய வீராங்கனைகள்

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழு இந்திய வீராங்கனைகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்தனர்.

மாலை மலர்

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் முன்னேறினர்.

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இதன் 64 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில், சர்வதேச இளைஞர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் அன்குஷிதா போரோ, இந்தாலியின் ரெபாகா நிகோலியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

54 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில் சாக்‌ஷி சவுத்ரி, சீனாவின் லூ சியாவை வீழ்த்தினார். 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து, ஜெர்மனியின் மேக்ஸி கிளோட்சரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவில் ஷாஷி சோப்ரா, பத்தாம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் சந்துகாஷ் அபில்கானை 5-0 என வீழ்த்தினார். 51 கிலோ எடைப்பிரிவில் ஜோதி குலியா காலிறுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்தார்.