செய்திகள்

சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான  தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்கி வைத்தார். அந்த வகையில்  பெரம்பலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 360 செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு அனைத்து செட்டாப் பாக்ஸ்களும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு செயலாக்கம்  செய்யப்பட்டு வருகின்றன. 

உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி செயலாக்கம் செய்வதற்காக ரூ.200-ஐ ஒரு முறை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா செட்டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200-க்கு மேல்  சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவையில்லை.எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சிக்னல் பெற்று பயன்பெறும் சந்தாதாரர்கள் இந்நிறுவனத்தின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை நிறுவும்போது கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும். 

இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 -க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதிக அளவிலான கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். #tamilnews

SCROLL FOR NEXT