சென்னை:
சரக்கு சேவை வரி அமலானதால் பெரும்பாலான சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.
நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.
தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடி மூடப்பட்டது. கேரள-தமிழக எல்லையான போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய இடங்களில் வாகன சோதனை நிறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல், நெல்லை மாவட்டம் புளியரை, குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மண்டலத்தில் வாளையார், கே.ஜி.சாவடி, பிச்சனூர், பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், கோபாலபுரம் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆகிய சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன. மேலும் கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், தொப்பூர், சத்தியமங்கலம் பண்ணாரி மற்றும் புதுச்சேரி எல்லையில் உள்ள கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை, விழுப்புரம் மாவட்ட வணிகவரி சோதனைச்சாவடிகளும் மூடப்பட்டன.
இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சரக்கு சேவை வரி நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள எல்லைகளில் 23 வணிக வரி சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் இப்போது சரக்கு சேவை வரிக்கு உட்படுத்தப்படும் பொருட்களை ஏற்றிச்செல்லும் எந்த வாகனத்தையும் நிறுத்தி சோதனை போட மாட்டார்கள். முன்பு போல இந்த வாகனங்கள் சோதனை சாவடியில் நிறுத்தி, உரிய ஆவணங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்ற முத்திரையை பெற வேண்டும் என்பது இனி கிடையாது.
நடமாடும் சோதனை குழுக்கள் மட்டும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அவ்வப்போது சோதனை போடுவார்கள். சரக்கு, சேவை வரிக்கு உட்படாத பெட்ரோலிய பொருட்கள், ஆல்கஹால் போன்ற 6 வகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை எப்போதும்போல நிறுத்தி சோதனையிட வேண்டுமா? என்பது குறித்து அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
வியாபாரிகளை பொறுத்தமட்டில், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக அவர்களுக்கு என்ன பிரச்சினை? என்பதை அரசுக்கு தெரிவித்தால்தான் அதை தீர்க்க முடியும். சிவகாசி பட்டாசு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரிவித்தார்கள், அதை அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. வியாபாரிகளை பொறுத்தமட்டில், ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் விற்பனை மேற்கொள்பவர்கள் ஆன்-லைன் மூலம் வரி கட்டிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ரூ.20 லட்சம் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு வரி கிடையாது. ரூ.75 லட்சத்துக்கு கீழ் விற்பனை செய்பவர்கள் ஒரு சதவீதம் வரி கட்டினால் போதும். வியாபாரிகளுக்கு சரக்கு, சேவை வரி பற்றி விளக்கம் அளிக்க ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் ஒரு உதவி மையம் இருக்கிறது. இதுதவிர, 600 முகாம்களும் இருக்கின்றன. இங்கெல்லாம் சென்று சரக்கு சேவை வரி கட்டுவதிலோ, கணக்கு தாக்கல் செய்வதிலோ ஏற்படும் சந்தேகங்களை கேட்டு வியாபாரிகள் போக்கிக் கொள்ளலாம்.
மேற்கண்டவாறு அந்த அதிகாரி கூறினார்.