கரூர்:
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. இதனை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட 5 பேர் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட 5 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோன்று மாவட்டத்தின் இதர பகுதிகளில் போராட்டம் நடத்திய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 135 பேர் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவும் நேரத் தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 188, 269 ஐ.பி.சி. உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.