செய்திகள்

காஷ்மீர்: சையது அலி ஜீலானி உள்பட பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுச் சிறை

இந்தியாவில் இருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க போராடிவரும் பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சையது அலி ஜீலானி உள்ளிட்டவர்களை போலீசார் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு சிலர் நிதியுதவி செய்து வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான முஹம்மது யாசீன் மாலிக் என்பவருடன் ஹுரியத் பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சையது அலி ஜீலானி மற்றும் மிர்வாயிஸ் மவுலவி உமர் பாருக் ஆகியோர் இன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை இவர்கள் கூட்டாக சந்தித்து பேட்டி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முஹம்மது யாசீன் மாலிக் வீட்டில் இன்று காலை இந்த சந்திப்பு நடப்பதாக இருந்த நிலையில்,  ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான முஹம்மது யாசீன் மாலிக்கின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.        

இதேபோல், மிர்வாயிஸ் மவுலவி உமர் பாருக் என்பவரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சையது அலி ஜீலானி கடந்த ஓராண்டு காலமாக சிறையிலும், வீட்டுச் சிறையிலும் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.