கைது 
செய்திகள்

செம்பட்டி அருகே போலி டாக்டர்கள் கைது

செம்பட்டி அருகே போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செம்பட்டி:

செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி, சேடபட்டியை சேர்ந்தவர் பெருமாள்(வயது 48). இவர் டாக்டருக்கு படிக்காமல் சொந்தமாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் மற்றும் செம்பட்டி போலீசார் இணைந்து அந்த கிளினிக்கில் சோதனை நடத்தினர். 

அப்போது பெருமாள் டாக்டருக்கு படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இது தொடர்பாக செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார். அங்கு இருந்த மருந்துகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது கிளினிக்கில் இருந்த நோயாளிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இது போல மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (54). இவர் கொடைரோட்டில் கிளினிக் நடத்தி வந்தார். இந்த கிளினிக்கில் அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வேதஞானலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது கனகராஜ் டாக்டருக்கு படிக்காமல் அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.