செய்திகள்

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்- செம்மலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் என்று மே தின பொதுக்கூட்டத்தில் செம்மலை எம்.எல்.ஏ. பேசினார். #CauveryIssue

மாலை மலர்

சேலம்:

சேலம், மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் அண்ணா தொழிற்சங்க மே தின பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி மைதானத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். போக்குவரத்து பிரிவு செயலாளர் சென்ன கிருஷ்ணன், அண்ணா பணியாளர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் பிரபாகரன், சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, மின்சார பிரிவு செயலாளர் சையத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரை ஆற்றியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் எல்லாம் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தருகிறார். சேலம் மாவட்டத்திற்கு மேம்பாலம் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு, முடிக்கப்பட்டு இன்றைக்கு முதற்கட்டமாக திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

வருகிற 13-ந்தேதி ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து குரங்குச்சாவடி வரை கிட்டத்தட்ட ரூ.120 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட அந்த மேம்பாலத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

5 ரோட்டில் இருந்து 4 ரோடு வரைக்கும் 2 அடுக்கு மேம்பாலம், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி வரைக்கும் மேம்பாலம், அதுமட்டும் அல்ல, இன்றைக்கு குரங்குச் சாவடியில் ஒரு மேம்பாலம், இரும்பாலை பிரிவு ரோட்டில் ஒரு மேம்பாலம் லீ பஜாரில் ஒரு மேம்பாலம் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது.

முள்ளுவாடி கேட்டில் 2 மேம்பாலங்கள், மணல் மார்க்கெட்டிலே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்படி போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், சேலம் மாநகர மக்களுக்கு தங்கு தடையில்லாமல் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார். மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை பசுமை திட்டத்தை கொண்டு வந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதனால் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயமாக அமையும். ஆனால் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த காவிரி மேலாண்மை வாரியம் தனது போராட்டத்தால் தான் அமைந்தது என்று மக்களிடம் கூறுவதற்காக போராட்டம் நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்தில் பொருளாளர் பங்க் வெங்கடாசலம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் நேதாஜி, பெரியபுதூர் கண்ணன், சதீஸ் குமார், பேரவை செயலாளர் சரவண மணி, ராம்ராஜ், விநாயகம், ஏ.கே.பாலு, வக்கீல் அருள்புஷ்ப ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #CauveryIssue