செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பிரதமரிடம் கேட்டாரா?: செம்மலை எம்.எல்.ஏ. பதில்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சுழற்சி முறையில் முதல்- அமைச்சர் பதவியை கேட்டதாக கூறப்படுவதற்கு செம்மலை எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.

மாலை மலர்

அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் மூத்த நிர்வாகியும், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செம்மலையிடம் மாலைமலர் நிருபர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சுழற்சி முறையில் முதல்- அமைச்சர் பதவியை கேட்டதாக கூறப்படுகிறதே?


பதில்:- பிரதமர் மோடியும், எங்கள் அணி தலைவரும் தனியாகவே சந்தித்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. எங்கள் அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு போதும் பொறுப்போ, பதவியோ? வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டிருக்க மாட்டார்.

கே:- மதுரை மேலூரில் நேற்று தினகரன் நடத்திய கூட்டத்திற்கு அதிக அளவில் மக்கள் திரண்டிருந்தது குறித்து உங்கள் கருத்து?

ப:- யார் கூட்டம் நடத்தினாலும் கூட்டம் கூடத்தான் செய்யும், அது இயற்கையான கூட்டமா? அல்லது செயற்கையான கூட்டமா? என்பதை அந்த கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களை வைத்து கணிக்க முடியும்.

நேற்று நடந்த கூட்டத்தில் பெண்களே பங்கேற்கவில்லை என்பதால் அந்த கூட்டம் தானாக வந்த கூட்டம் இல்லை என்பதும், தமிழகம் முழுவதும் இருந்து அழைத்து வரப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கே:- அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு முயற்சி எந்த நிலையில் உள்ளது?

ப:- இணைப்பு முயற்சி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.