நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் கந்து வட்டி கொடுமையால் சிறு நீரகத்தை விற்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த பகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்கு மிகவும் குறைவாகவே கூலி வழங்கப்படுகிறது.
இதனால் அவர்கள் வறுமை காரணமாக தினக் கந்து வட்டி, வார கந்து வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். வாங்கிய அசல் தொகைக்கும் அதிகமாக வட்டி செலுத்திய போதும் அசல் தொகையை கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கறார்கள். பணத்தை வசூலிக்க கந்து வட்டிக்காரர்கள் நடந்து கொள்ளும் முறையால் தொழிலார்கள் தற்கொலை முடிவை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இதற்கிடையே வாங்கிய கடனை அடைப்பதற்காக விசைத்தறி தொழிலாளர்கள் தங்களது ஒரு சிறு நீரகத்தை விற்று கடனை அடைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடன் தொல்லையால் சிரமப்படும் தொழிலாளர்களை இடைத் தரகர்கள் அணுகி அவர்களின் கிட்னியை விற்பனை செய்ய ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஆனால் இது தொடர்பாக எந்த புகாரும் போலீசுக்கு வரவில்லை.
ஆனால் தற்போது ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த ரவி கந்து வட்டி கடனுக்காக தனது ஒரு கிட்னியை விற்க கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி சம்பூர்ணம் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் அவரது கணவரை மீட்டுள்ளனர்.
கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக பள்ளிப்பாளையத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன் கூறியதாவது:-
பள்ளிப்பாளையம், குமாரபாளையத்தில் கந்து வட்டி பிரச்சினை அதிகளவு உள்ளது. இது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு வீடு திரும்பிய கட்சியின் இணைச் செயலாளர் வேலுச் சாமி படுகொலை செய்யபட்டார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த பகுதியில் தற்போதும் கந்து வட்டி பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்காக சிறுநீரகத்தை விற்கும் சம்பவங்கள் நடந்த போதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.