செய்திகள்

திப்பு சுல்தான் காலத்து நகைகள் என்று கூறி போலி தங்க காசுகளை விற்பனை செய்த 4 பேர் கைது

திப்பு சுல்தான் காலத்து நகைகள் என்று கூறி போலி தங்க காசுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதியில் மர்மநபர்கள் போலி தங்க காசுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருப்பதி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்ரெட்டி மற்றும் போலீசார் அலிபிரி பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சித்தூர் மாவட்டம் பிகாரிபாளையத்தைச் சேர்ந்த சிவகிருஷ்ணா, சிவபிரசாத், மோகன், கருணாகர்ரெட்டி என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் போலி தங்க காசுகளை பொதுமக்களிடம் விற்று, மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறினர்.

அவர்களுக்கும், பெங்களூருவை சேர்ந்த கோபால் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் கோபால், என்னிடம் தங்க காசுகள் உள்ளன. அந்தத் தங்க காசுகள் போலியானவை. ஆனால், அதனை வைத்து நீங்கள் உங்களுடைய நண்பர்கள் மூலமாக விற்று பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போர்வைகள், துணிகள் மற்றும் வளையல்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்வதுபோல் வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் நைசாக பேசி போலி தங்க காசுகளை விற்பனை செய்துள்ளனர்.

தங்க காசுகளை விற்பனை செய்யும்போது, அவர்கள் எங்களின் தத்தா நிலத்தில் புதையல் கிடைத்ததாகவும், அதில் திப்பு சுல்தான் காலத்து தங்க காசுகள் இருந்ததாகவும், அதனை எடுத்து உங்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம் எனக் கூறி, நம்ப வைத்து முதலில் அசல் தங்க காசுகளை வழங்கி, தங்களுக்கு சந்தேகம் எழுந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறி, போலி தங்க காசுகளை 1 கிலோ ரூ.2 லட்சம் என விற்பனை செய்துள்ளனர்.

திருப்பதி நிம்மகாயில விதியைச் சேர்ந்த பூபால் என்பவரிடம் ரூ.2 லட்சம் பெற்று போலி தங்க காசுகளை விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், ரூ.3½ லட்சம் மதிப்புள்ள போலி தங்க காசுகள், அசல் தங்க காசுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews