புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் மாணிக்க செட்டியார் தோட்டம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). இவரது மகள் ஜெயலட்சுமி. (வயது 27).
இவருக்கும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ருக்மாங்கதன் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம நடந்தது.
கடந்த சில நாட்களாக ஜெயலட்சுமி பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஜெயலட்சுமியின் தாய் கோமதி வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பொருட்கள் வாங்க வெளியே சென்றார். பால கிருஷ்ணன் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென ஜெயலட்சுமி சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் ஜெயலட்சுமி அலறினார். மகளின் அலறல் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் குளியல் அறையில் இருந்து விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றார். இதில் அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதற்குள் வீட்டின் தரை தளம் தீப்பற்றி எரிந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் ஜெயலட்சுமியை கரிக்கட்டையாக பிணமாகவே மீட்க முடிந்தது. தீயில் கருகி படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews