நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆறு தற்போது வறண்டு விட்டதால், குடிநீர் எடுக்கும் அளவு மிகவும் குறைந்து உள்ளது. இதனால் நாமக்கல் நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பில் யாரும் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை மீறி யாராவது வீட்டில் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுகிறார்களா? என நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று ஏ.எஸ்.பேட்டை, சந்தைபேட்டைபுதூர், குட்டைதெரு, நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 18 வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வீடுகளில் இருந்த 18 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் நாமக்கல் பஸ்நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.