செய்திகள்

கூவத்தூரில் தங்கியிருந்த போது எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யாதது ஏன்?: சீமான்

கூவத்தூரில் தங்கியிருந்த போது எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யாதது ஏன்? என்று சீமான் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் தற்போதைய ஆட்சி முற்றுப்பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் மத்திய அரசு தலையீட்டால் அது நடைபெறாமல் உள்ளது. மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றால் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம். தற்போது எல்லாம் அதிகாரத்தில் நடக்கிறது. தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் கூவத்தூரில் தங்கியிருந்த போதே அனைவரையும் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பா.ஜனதா ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். மற்ற கட்சிகள் சந்திப்பது அவரவர்களின் நிலைப்பாடு.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. காலத்தை தான் கடத்தி செல்லும். தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை அனைவரும் எதிர்த்தார்கள். அனிதா மரணத்திற்கு பிறகு பள்ளி-கல்லூரி மாணவர்கள் தெருவில் நின்று போராடினார்கள். அதன் வெளிப்பாடாக இப்போது நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.