சீமான் 
செய்திகள்

நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி: சீமான் பேட்டி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

நாம் தமிழர் கட்சி சார்பில் பத்தாண்டு பசுமை திட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பனை விதைகளை விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார்.

அங்குள்ள நாராயணபுரம் ஏரிக்கரையில் பனை விதைகளை சீமான் நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச் சூழல் துறை நிர்வாகிகள் வெண்ணிலா, ஜானகிராமன், நவீன், குறுதிக் கொடை பாசறை பொறுப்பாளர் அரிமா நாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவரும் பனை விதைகளை ஏரிக்கரையோரங்களில் நட்டனர்.

இந்த நிகழ்சசியில் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச் சூழல் துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடும் பணிகளை செய்து வருகிறோம். பல கோடி பனை திட்டத்தை மாநிலம் முழுவதும் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. பனை மரங்களை காக்கும் எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

தமிழகம் முழுவதும் இன்று பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் ஏரிகரையோரங்களில் விதைத்துள்ளனர்.

தேர்தல் களத்தை பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் ஒதுங்கி நின்றதே இல்லை. அந்த வகையில் விரைவில் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.

தேர்தலில் பெண்களுக்கு சம உரிமையை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன்படி 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அது எந்த தொகுதி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். கேந்திரா வித்யாலயா பாட திட்டத்தில் தலித் பற்றிய கேள்வி நச்சு விதையை விதைப்பது போல் உள்ளது.

இவ்வாறு சீமான் கூறினார்.