கூட்டத்தில் சீமான் பேசியபோது எடுத்த படம். 
செய்திகள்

மேலும் பல துணைவேந்தர்கள் வெளியே சுற்றுகிறார்கள்: சீமான்

முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் பல துணைவேந்தர்கள் வெளியே சுற்றுகிறார்கள் என கன்னியாகுமரியில் சீமான் கூறினார்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் நாம் தமிழர் கட்சியின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சீமான் பேசியதாவது:-

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தால் ஒரு மீனவரை கூட சிங்கள கடற்படை பிடிக்க முடியாது. அப்படி பிடித்தால் பதவி விலகி விடுவோம்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றி விடலாம் என்ற கனவு ஒரு போதும் பலிக்காது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு பாடுபடுவது போல குரல் கொடுக்கிறார். இவ்வளவு நாள் அரசியலுக்கு வராமல் இப்போது அரசியலுக்கு வருவதாக கூறுவது நாட்டுமக்களை ஏமாற்றும் செயல்.

தமிழக அரசு பஸ் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி விட்டது. ஆனால் பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க மானியம் தருவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகம் அமைந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாம் தமிழர் கட்சி மீனவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும். இங்கு வர்த்தக துறைமுகம் அமைப்பதை எதிர்ப்போம்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் எந்த மாற்றமும் வந்து விட போவதில்லை.

பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஊழல் தேசியமயமாக்கப்பட்ட நாட்டில் கல்வித்துறையில் ஊழல் நடப்பது பெரிய வி‌ஷயமில்லை. ரூ.3 கோடி, ரூ.4 கோடி என லஞ்சம் கொடுத்துதான் பலர் துணைவேந்தர் பதவிக்கு வருகிறார்கள். அவர்கள் எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள்.

கல்வித்துறை என்பது முன்பு சேவை துறையாக இருந்தது. இப்போது அது வியாபாரமாகி விட்டது. இதனால் ஒரு துணைவேந்தர் இப்போது கைதாகி இருக்கிறார். இதுபோல இன்னும் பல துணைவேந்தர்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மனித தவறே காரணமாகும். அதில் தெய்வ குற்றம் ஏதுமில்லை. அரசின் வருமானத்திற்காக கோவில் வளாகத்தில் ஏராளமான கடைகளை கட்டி உள்ளனர்.

கோவிலுக்கு மிக அருகே கடைகள் அமைக்கப்பட்டதே தீ விபத்துக்கு காரணம். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் கடைகளை அமைத்தால் இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும். 4 வழிச்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுத்திருப்பது தவறு. தனியார் லாப நோக்குடன் செயல்படுவதாலேயே சாலைகள் பழுதடைந்து உள்ளது.

குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா தலைமை பதியை அரசுடைமை ஆக்க நினைப்பது தேவையற்றது. இதையும் மீறி அரசுடைமை ஆக்கினால் போராட்டம் வெடிக்கும். அரசுக்கு தேவையற்ற சங்கடங்கள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews