செய்திகள்

விவசாயிகளின் பிரச்சினையை கண்டு கொள்ளாத அரசு: சீமான் பேட்டி

விவசாயிகளின் பிரச்சினையை கண்டு கொள்ளாத அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மாலை மலர்

கும்பகோணம்:

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் கும்பகோணம் எஸ்.இ.டி.மகாலில் இயற்கை வேளாண் பெருங்குடியோன் நம்மாழ்வார் நினைவு அரங்கில் உழவர் பாதுகாப்பு மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்த், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் மணிசெந்தில், வடக்கு மண்டல செயலாளர் வினோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கை கும்பகோணம் மருத்துவர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார். கல்வியாளர் ஹூமாயூன் வரவேற்று பேசினர்.

கருத்தரங்கில் கதிராமங்கலத்தின் போராட்டக்களமும், படிப்பினையும், நம்மாழ்வார் மீது சுமத்தப்படும் அவதூறுகளும், இயற்கை வேளாண் மரபுகளும், தமிழர் வாழ்வியலும், திணை ஒழுக்கம் சார்ந்த வேளாண் மையும், பண்டைத்தமிழர் வேளாண் மரபுகள் ஆகிய தலைப்புகளில் பேசினர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன்சிங், அஸ்ஸாமில் இருந்து ஜாதவ் பேயிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும். மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு கூட்டம் கூட்டமாக வந்து போராடி சாதித்தனர். அதற்கு காரணம் நமது முன்னோர்கள் விதைத்த விதைதான். போராட்டம் என்று வந்துவிட்டால் அச்சமின்றி போராட வேண்டும். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை மூடமுடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஓ.என்.ஜி.சி. மூடும்வரை போராட்டம் தொடரும். ஓ.என்.ஜி.சி.யை மூடவில்லை என்றால் தமிழகத்தில் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் பாதிக்கும். விவசாயிகளை காப்பாற்ற முடியாது.

மது கடைகளை மூட முடியாது என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்கள் அதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வாழ்வது கஷ்டம் என்பதை புரிந்துதான் மக்கள் போராட தொடங்கி உள்ளனர். அரசு அதிகாரம் மிகப்பெரிய அதிகாரம். அந்த அதிகாரம் தனி பெரும் முதலாளிகளின் கைக்கு மாறியிருக்கிறது. மக்களுக்கான அதிகாரமாக மாறவேண்டும். மக்களின் நலனுக்கான அதிகாரமாக இருந்தால்தான் நாடு வளம்பெறும்.

காங்கிரஸ், பா.ஜ.க. என மாறி மாறி மத்தியில் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகாவில் பா.ஜ.கவும், காங்கிரசும்தான் மாறி மாறி வருவதால் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசும் அங்குள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப நடந்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்புதான் ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்டம், கேரளா மாநிலத்தின் இடையில் 7 அணைகள் கட்டுவதற்கு இந்திரா காந்தி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த திட்டம் தற்போது மறந்தே போய்விட்டது. அங்கு அணைகள் கட்டப்பட்டால் நாம் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீரை கேட்க வேண்டிய அவசியமே ஏற்படாது.

தமிழகத்தில் ஏரி, குளங்கள் தூர்த்துவிட்டதால் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விட்டது. எனவே அதை எல்லாம் தூர்வாருவதுடன், நீர் தேக்கங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும்.

அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சனை உள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. கார் உற்பத்தி, செல்போன் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அத்தியாவசிய தேவையான நீருக்கும், சோற்றுக்கும் அந்த முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

இயற்கை உரத்திற்கு ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 240 விவசாயிகள் உயிரிழந்தனர். பிரதமர் மோடி அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு விவசாயி இறந்தது குறித்து மோடி துயரம் அடைந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.