செய்திகள்

சசிகலா பரோலுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்திடாதது வேதனை- சீமான்

நடராஜனை பார்க்க சசிகலா பரோலுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்து போடாதது மரண வலியாக இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார். #Sasikala #Seeman

மாலை மலர்

தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தஞ்சைக்கு வந்தார்.

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடராஜன் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டவர். அவர் இழப்பு என்பது தமிழ் சமுதாயத்திற்கு மாபெரும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஆகும்.


நடராஜன் உயிரோடு இருக்கும் போதே சசிகலா அவரை பார்த்திருக்க முடியும். இத்தனை அ.தி.மு.க எம்.பி.க்கள் இருந்தும், அவரது பரோலுக்கு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கையெழுத்து போடாதது மரண வலியாக இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடராஜன் மரணத்திற்கு மரியாதை செய்யும் போது தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வரோ ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்கலாம்.

மனித நேயம் அற்றவர்களுக்கு கீழே நாம் இருக்கிறோம் என்பது பெரிய அவமானமாக உள்ளது. பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று சொல்லும் ஒரு மிகப்பெரிய கூட்டத்திடம் சிக்கி கொண்டோம் என்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற அரசியல் நாகரிகம், பண்பாடற்ற செயல் மரணத்தை விட கொடுமையாக உள்ளது.