சென்னை:
மாணவி அனிதா மரணம் மற்றும் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி அளித்த பேட்டியில் கிருஷ்ணசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கிருஷ்ணசாமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
மக்களின் உணர்வுகள் என்ன என்பதை கிருஷ்ணசாமி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது தவறுகளை ஏற்றுக் கொள்வதே இல்லை. அந்த வகையில் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள தலைவர்கள் நீட் தேர்வில் தாங்கள் செய்த தவறுகளை மறைக்கவே பார்க்கிறார்கள்.
இப்படி பா.ஜனதா தலைவர்களோடு சேர்ந்து கொண்டு கிருஷ்ணசாமி பேசி வருகிறார். அவருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்த போது அதனை ஆதரித்தார். அதே போல மீத்தேன் எரிவாயு திட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட தமிழர்களை பாதிக்கும் அனைத்து விஷயங்களில் அவர் பா.ஜனதா பக்கமே நின்று கொண்டிருக்கிறார். இப்படி தமிழர் நலனுக்கு எதிராக கிருஷ்ணசாமி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, எம்.பி. பதவிக்காக தி.மு.க.விடம் மண்டியிட்டார். அப்போது கூட அவரது கட்சியில் உள்ள வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தருவதற்கு கூட அவர் முன்வரவில்லை. இப்படி சுயநலத்தையே தன் நலமாக கொண்டிருப்பவர் அவர். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சமூக அக்கரையோடு மக்கள் நல பணியாற்றி வருபவர் அவரை பார்த்து, அந்த பொம்பளய எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். கிருஷ்ணசாமியால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியும்.
அவரது குடும்பத்தினர் அனைவருமே டாக்டர்களாகி விட்டனர். எந்த நீட் தேர்வை எழுதி அவர்கள் தேர்வானார்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் தயவால் எம்.எல்.ஏ.வான அவர் இன்று அந்த கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இன்று நீட்டுக்கு எதிராக நடக்கும் போராட்டம் கிருஷ்ணசாமியின் பேரப் பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் என்பதை அவர் உணர வேண்டும்.
அவரது பின்னால் அணி வகுக்கும் தமிழ் பிள்ளைகளும் இதனை உணர வேண்டும். ஆட்சியாளர்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்ற எண்ணமே கருத்துக்களாக வெளிப்படுகிறது.
மரணத்தில் கூட மனதளவில் பாதிக்கப்படாதவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும்.
இன்று நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவ மாணவர்களை விட கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அதிக அளவில் போராட்டத்தில் குதித்துள்ளனர். அடுத்த தலைமுறை சகோதரனுக்காகவும், சகோதரிகளுக்காகவுமே அவன் போராடிக் கொண்டிருக்கிறான்.
இதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடக்கூடாது. மாணவர்கள் போராட்டத்தில் தமிழ் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் புகுந்து விட்டார்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தேச துரோகிகளாக சித்தரித்து விடக் கூடாது.
தமிழக அரசு தனது பொறுப்பை உணர்ந்து இந்த விஷயத்தில் அக்கரையோடு செயல்பட வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் புரட்சி போராட்டம் அரசை வீழ்த்தும் வகையில் கூட செல்லும் போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.