அம்மாப்பேட்டை:
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு புத்தூர்-நடுப்பட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி நடைபெறுவதற்கு முன்பே சாலையின் கீழே செல்லும் வடிகால் குழாய்களை சரி செய்ய வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணி முடிவடைந்து வடிகால் குழாய்களை சரிசெய்தால் புதிதாக போடப்பட்ட சாலை சேதமடைந்துவிடும் என்பதை பேரூராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
ஆனால் இதை கவனத்தில் கொள்ளாமல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டதால் தற்போது பெய்து வரும் கனமழையில் வடிகால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது. அருகில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
இதை கண்டித்தும், வடிகால் குழாய் மற்றும் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் கடந்த 2-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டி வடிகால் குழாய் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரூராட்சியை கண்டித்தும், உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் புத்தூர்-நடுப்பட்டி சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலிங்கம், கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.